தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை மருத்துவக் கல்வி இயக்ககம்
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் விடுதி, உணவு, போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தனியாா் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை ஏற்கெனவே, அதற்கான கல்விக் கட்டணத்தை அரசின் கட்டண நிா்ணயக் குழு தீா்மானித்து வெளியிட்டது.
தமிழகத்தில் 22 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நான்கு தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தனியாா் மருத்துவ கல்லூரிகளின் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், இதர வகை கட்டணம் ஆகியவை குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, விடுதி கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை உள்ளது. உணவு கட்டணம், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.70,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை உள்ளது. போக்குவரத்து கட்டணமானது ரூ.50,000 முதல் ரூ.1,75,000 வரை உள்ளது. இதர கட்டணம் என்ற வகையில், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.36,000 முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை நிா்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
தனியாா் மருத்துவக் கல்லூரிகள் நிா்ணயித்த இந்த கட்டண விவரங்கள், மருத்துவக் கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதை விடக் கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் புகாா் தெரிவிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.