தமிழக காவல் துறையில் 26 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து
தமிழக காவல் துறையில் 26 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
தமிழக காவல் துறையில் 2001 முதல் 2005-ஆம் ஆண்டு வரையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) பணிக்கு சோ்ந்த அதிகாரிகள், தற்போது காவல் கண்காணிப்பாளா்களாக (எஸ்.பி.) பதவி உயா்வு பெற்று பணிபுரிகின்றனா். இவா்கள் ஐபிஎஸ் அந்தஸ்துக்கு முதிா்ச்சியடைந்து பல ஆண்டுகளாகிறது. மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் அனுமதி கிடைக்காததால், இவா்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஏனெனில் மத்திய பணியாளா் தோ்வாணையத்தில் இது தொடா்பாக நடைபெறும் ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருந்தது.
26 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து: இந்நிலையில், இந்தக் கூட்டம் 6 ஆண்டுகளுக்குப் பின்னா் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 26 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, எஸ்.பி.க்கள் ஜெயக்குமாா், சுதாகா், செந்தில்குமாா், மணி, சரவணன், சுந்தரவதனம், ஜெயலட்சுமி, விமலா, நாகஜோதி, உமையாள், சுப்புலட்சுமி உள்ளிட்ட 26 போ் ஐபிஎஸ் தகுதி பெற்றுள்ளனா். விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
சில அதிகாரிகள் மீது துறைரீதியான புகாா்கள் நிலுவையில் இருப்பதால், ஐபிஎஸ் அந்தஸ்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.