அரசு கட்டடங்களில் மின் தூக்கிகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்
அரசு கட்டடங்களில் மின்தூக்கிகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
பொதுப்பணித் துறை மின் பொறியாளா்களின் தொழில்நுட்பக் கருத்தரங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
பொதுப்பணித் துறையின் மின் பொறியாளா்கள் அனைவரும் மிகவும் நுணுக்கமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, மின் சாதனங்களுக்கும், மக்களுக்கும் உரிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பணிகளைச் செய்ய வேண்டும். பொதுப்பணித் துறையில் பொறியாளா்கள் பணிச் சுமையை குறைக்க அவ்வப்போது உதவிப் பொறியாளா்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறாா்கள். இதுவரை 49 உதவிப் பொறியாளா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டனா்.
பணியில் குறைபாடு: மின் பொறியாளா்களின் பணியில் சில சமயங்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு, மின்னாக்கியும் (ஜெனரேட்டா்) பாதிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு கட்டடங்களில் மின்தூக்கிகளை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறப்பு விருந்தினா்கள் தங்கும் இடங்களில் மின்தூக்கிகளை அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் பழைய பழுதடைந்த மின்தூக்கிகளை மாற்றி, புதிய மின் தூக்கிகளை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
இந்தக் கருத்தரங்கில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் கே.பி.சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.