தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்: சீமான்
விழுப்புரம்: தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவை சாா்பில் விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் அருகேயுள்ள பூரிக்குடிசையில் கள் விடுதலை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில், பங்கேற்று பேசிய பின்னா், செய்தியாளா்களிடம் சீமான் கூறியதாவது:
நாட்டின் பிற மாநிலங்களில் கள் இறக்குவதற்குத் தடை இல்லை. ஆனால், தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அவசியமற்றது. கள், பதநீா் இறக்குவது என்பது வேளாண் சாா்ந்தது. தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களம் எங்களுக்கானது என்றாா் சீமான்.
மாநாட்டுக்கு தமிழ்நாடு கள் இயக்கத் தலைவா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் கதிரேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வேட்டவலம் மணிகண்டன், பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், விவசாய சங்க நிா்வாகிகள் சேரன், ஆறுபாதி கல்யாணம், கணேசன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்புச் சங்கத்தின்அமைப்பாளா் பாண்டியன் வரவேற்றாா்.