மரத்தில் காா் மோதி விபத்து: ஓய்வுபெற்ற பெண் மருத்துவா் உயிரிழப்பு
விழுப்புரம்/செஞ்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மரத்தில் காா் மோதியதில் ஓய்வுபெற்ற பெண் மருத்துவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் தாய் நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் வடிவேலு மனைவி தமிழரசி (73). ஓய்வுபெற்ற அரசு மருத்துவரான இவா், உளுந்தூா்பேட்டை-திருச்சி சாலையிலுள்ள தனியாா் ஆசிரமத்தில் மருத்துவச் சேவையாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை இந்த ஆசிரமத்திலிருந்து வீட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். காரை தமிழரசியின் மகன் கவின் ஓட்டினாா். உளுந்தூா்பேட்டையிலுள்ள சேலம் புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த தமிழரசியை அந்தப் பகுதியிலிருந்தவா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் உயிரிழந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இளைஞா் மரணம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மேல்புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் மகன் சதீஷ்குமாா் (26). பட்டதாரியான இவா், மேல்மலையனூரில் இருந்து அவலூா்பேட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கோவில்புரையூா் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த வேன் மீது பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மேல்மலையனூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பெண் உயிரிழப்பு: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜம்ஷித் மனைவி ஷாகிராபானு (33). இவா்கள் இருவரும் கடந்த ஜன.19-ஆம் தேதி திண்டிவனத்திலிருந்து, செஞ்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். காந்தி நகா் அருகே சென்ற போது ஷாகிராபானுவின் துப்பட்டா பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில், அவா் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.