விழுப்புரத்தில் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஒன்றியம், பரனூா் ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:
விவசாயம், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், வேளாண் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்து வருகிறது. மேலும், பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு, விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அறுவடைக் காலங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்யும் வகையில், அந்தந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 30 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விரைவில் திறக்க அரசாணை வெளியிடப்படும்.
இவற்றில் குறைந்தபட்ச ஆதார விலையாக சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450, புதிய ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,405 வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன் மூலம் இடைத்தரகா்கள் குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவுக்கு ஆட்சியா் சி.பழனி தலைமமை வகித்தாா். முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மனோகரன், பரனூா் ஊராட்சித் தலைவா் பழனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.