Anupama: ``இறப்பதற்கு முன் நண்பர் அனுப்பிய அந்த மெசேஜ்; என் மனதின் ஆறாத காயம்" -...
தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டு பெருமிதம்!
தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருப்பதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) வெளியிட்டுள்ளதொரு விடியோவில் தெரிவித்திருக்கிறார்.
பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை பட்டியலிட்டு அவற்றுக்கு விளக்கமளித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று விடியோ பதிவிட்டுள்ளார்.
அதில், “பல துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், மக்களுடைய வாழ்க்கைத்தரம், வாங்கும் திறன், கல்வி, மருத்துவத் திறன், உள்கட்டமைப்பு, சட்டம் - ஒழுங்கு என எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகிற குறியீடுதான் ஜிஎஸ்டிபி. ஆகவே, இது முக்கியத்துவம் பெறுகிறது.
நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது கரோனா பெருந்தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தது. நிதி நெருக்கடி, ஒன்றிய பாஜக அரசு நமக்கு நியாயமாக தர வேண்டிய பணத்தை தராமல் வஞ்சித்தது என பல பிரச்சினைகள் இருந்தன. இதையெல்லாவற்றையும் கடந்துதான் வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இது எவ்வளவு பெரிய சாதனை.
அதிமுக ஆட்சிக்காலத்தைவிட இது இரட்டிப்பு மடங்கு வளர்ச்சி. நான்காண்டுகளில் சராசரியாக 8.9 வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.
இதனை மிகப்பெரிய சாதனையாக ஏன் குறிப்பிடுகிறோமெனில், அதிமுக ஆட்சிக்காலத்தில், கடந்த 2011-16இல் பொருளாதார வளர்ச்சி 6.7%, அதன்பின், 2016-21இல் 5.2% ஆக மேலும் குறைந்துவிட்டது. இதை நான் தரவுகளுடன் தெரிவிக்கிறேன்.
கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டைப் போலவே பெரிய மாநிலங்களான கர்நாடகம் 7.9%, மகாராஷ்டிரம் 8.2% வளர்ச்சி அடைந்திருந்தபோது, நாம்(தமிழகம்) 11.19% வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
இது எதைக் காட்டுகிறதெனில், நம் அரசு எந்தளவுக்கு நிர்வாகத் திறனுடன் ஆட்சி நடத்துகிறோம் என்பதைக் காட்டுகிறது.
ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் 3-ஆவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். ஆட்சிக்கு வருவதற்கு முன், 26 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதியை 52 பில்லியன் டாலராக உயர்த்தியிருக்கிறோம். இதிலும் அதிமுக ஆட்சியைவிட இரட்டிப்பு வளர்ச்சியே.
வேலைவாய்ப்பில், உற்பத்தி துறையில் மட்டும் 35 லட்சத்திலிருந்து 73 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். இதிலும் இரட்டிப்பு வளர்ச்சி.
அவர்கள் 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை நாம் நான்கே ஆண்டுகளில் செய்து காட்டியிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, எங்களுடைய சாதனையை நாங்களே முறியடிப்போம் என்பதையும் உறுதியாகச் சொல்கிறேன்!” என்றார்.