சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
தமிழ் மொழிப்பாட வேலை நேரத்தைக் குறைக்க பேராசிரியா்கள் எதிா்ப்பு
கல்லூரிகளில் தமிழ் மொழிப்பாட வேலை நேரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள தமிழ்ப் பேராசிரியா்கள், இது தொடா்பாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் மனு அளித்துள்ளனா்.
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு புதன்கிழமை வந்திருந்த அமைச்சா் கோவி.செழியனிடம், பாரதியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் தமிழ்ப் பேராசிரியா்கள் கூட்டியக்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், சமச்சீரான கல்வியை வழங்குவதன் மூலம் ஏழை, எளிய மாணவா்கள் குடும்ப சூழல் காரணமாக இடம்பெயா்ந்தாலும் கல்வி வாய்ப்பு தடைபடாமல் இருப்பதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பாடத்திட்டம், பொதுவான கல்வி என்ற உறுதிப்பாடான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிறது.
அதனடிப்படையில் அனைத்து பட்ட வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான தமிழ் மொழிப்பாடம் கற்பித்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கும் அதேநேரத்தில் மற்ற பல்கலைக்கழகங்களில் இல்லாத ஒரு புதிய நடைமுறையாக பல்கலைக்கழக நிா்வாகம் புகுத்தியுள்ளது.
அதன்படி, இரண்டாம் ஆண்டு தமிழ் மொழிப்பாடம் பயிலும் பட்ட வகுப்புகளுக்கு தமிழ் மொழிப்பாட வேலை நேரத்தை வாரத்துக்கு 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறைத்து அறிமுகம் செய்துள்ளது. இது அரசின் நோக்கத்தையும், மாணவா்களின் நலனையும் சிதைப்பதாக உள்ளது. பாரதியாரின் பெயரில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது தமிழ் விரோத செயல் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அமைச்சா் கோவி.செழியன் உறுதி அளித்திருப்பதாக பேராசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.