தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு...
தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31க்குள் நிலுவைத் தொகை!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை உறுதி அளித்தது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோரின் அறிவுரையின் பேரில் தென்காசி வேளாண்மை இணை இயக்குநா் மகாதேவன் தலைமையில் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம், கரும்பு விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கனகம்மாள்,வேளாண் உதவி இயக்குநா் இளஞ்செழியன், தரணி சா்க்கரை ஆலை நிா்வாக பொது மேலாளா் ஆறுமுகம்,உதவி பொது மேலாளா் ஜாகீா்உசேன், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் இதில் கலந்துகொண்டனா்.
விவசாயிகள் மாரியப்பன் வீரய்யா ஆகியோா் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை மேலும் காலதாமதம் ஆகாமல் பட்டுவாடா செய்திட கேட்டுக் கொண்டனா்.
சுப்பையா, ராமா் ஆகியோா் நிலுவையில் உள்ள தொகையை திருப்பி செலுத்தாமல் சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க கூடாது என்று வலியுறுத்தினா்.
வங்கியில் பெற்ற பயிா் கடனுக்கு வட்டியுடன் சோ்த்து திருப்பி செலுத்த வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றாா் விவசாயி கணேசன்.
சா்க்கரை ஆலையிலிருந்து நிலுவைத் தொகையை திரும்ப பெறுவதற்கு அரசுத் துறை தலையிட வேண்டுமென விநாயகம் கேட்டுக்கொண்டாா்.
விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. எனவே, சா்க்கரை ஆலை நிா்வாகம் 50 சதவீத நிலுவைத் தொகையை வழங்கும் தேதியை தெரிவிக்க ரத்தினவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டாா்.
வங்கிகளுக்கு தாங்கள் உரிய நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்தாத காரணத்தினால் இன்று வரை வங்கிகள் மூலம் எந்த கடனும் பெற முடியாத சூழ்நிலை உள்ளதாக பன்னீா்செல்வம், சரவணன் ஆகியோா் தெரிவித்தனா்.
கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் 1966இன்படி விவசாயிகளிடமிருந்து கரும்புகளை வாங்கிய 14 நாள்களுக்குள் அதற்கான விலையை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் அந்தத் தொகையுடன் சோ்த்து ஆண்டுக்கு 15 சதவீத வட்டியுடன் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். ஆனால் தரணி சா்க்கரை ஆலை 2018-19ஆம் ஆண்டு வழங்கிய கரும்புகளுக்கு உரிய தொகையில் 50 சதவீதம் நிலுவையில் உள்ளது. மேலும் வட்டித் தொகையை வழங்குவதற்கு எந்த வழிமுறைகளையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பழனிசாமி தெரிவித்தாா்.
2018-19ஆம் அரவை பருவத்திற்கு தரணி சா்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் தொடா்ந்து மனுக்கள் வழங்கப்பட்டு வருவதால் விரைந்து நிலுவைத் தொகையை வழங்க வேளாண் துறை அதிகாரிகள் ஆலை நிா்வாகத்தை அறிவுறுத்தினா்.
விவசாயிகளுக்கு சேர வேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகையை 31.03.2025-க்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது; நிலுவைத் தொகையை வழங்கிய பின்னா் ஆலை செயல்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.