திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!
குஜராத்தில் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத்தின் கல்யாண்புரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பிப்ரவரி 8 முதல் 10 வரை பிராண பிரதிஷ்டை மஹோத்சவம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் தலித் சமூக மக்களின் பங்களிப்புகள் நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
கடந்த ஜனவரி 16 அன்று காந்திநகரைச் சேர்ந்த இந்திரஜித் சிங் சோதா என்பவர் தலித் மக்களின் பங்களிப்பு நிராகரைக்கப்படுவதைக் கண்டறிந்தபோது இந்தப் பிரச்சினை முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், ஹிந்து விழிப்புணர்வு அமைப்புகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை.
இதையும் படிக்க | வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!
ஜனவரி 25 அன்று இந்திரவதன் பரோட், சங்கர்பாய் படேல் ஆகியோர் கல்யாண்புரா கிராமத்திற்குச் சென்று கோயிலின் தலைமை நிர்வாகி பாலபாய் தயாவைச் சந்தித்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். அவர் கோயில் குழுவுடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிப். 1 அன்று ஹிந்து அமைப்பு ஒன்றின் தலைவரான ரகுவீர் சிங் ஜடேஜா மற்றும் பட்டியல் சமூகத்தின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், கோவில் நிர்வாகம் இதுகுறித்து பதிலளிக்கவில்லை.
மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க எழுத்துப்பூர்வ தீர்மானம் கொண்டுவர ஹிந்து அமைப்புகள் முன்வந்த நிலையில் அங்குள்ள தாசில்தார் ஒப்புதல் தர மறுத்தார்.
திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்
கடந்த பிப். 9 அன்று இந்த விவகாரம் குறித்து இந்திரவதன் பாரோட் என்பவர் குஜராத் முதல்வர் உள்பட பல அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்தப் பிரச்னையின் தீவிரம் அதிகமானது.
இதனைத் தொடர்ந்து, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து 3 நாள்களுக்குள் உடனடியாக விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.