`செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்று...’ - ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்ன?
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (DISHA) குழுவின் மாநில அளவிலான 4வது ஆய்வுக் கூட்டம் இன்று (15.02. 2025) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/9swopmg3/Gj0O97uWEAAnbZu.jpeg)
முதல்வர் பேசியது என்ன?
கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனைச் செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். திட்டங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகச் செலவிடுவது, திட்டச் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, மத்திய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே இணக்கமான நிலையை உருவாக்குவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசினுடைய திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிவகை செய்வது ஆகிய பணிகளை இதன் மூலமாகச் செய்து வருகிறோம்.
`செங்கோட்டையன் கேட்டுக் கொண்டதின் படி...'
"கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் கேட்டுக் கொண்டதின் படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாகப் பணப்பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் (PMAYG) திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுப்புராமன் கோரிக்கையை ஏற்றுக் குழந்தைகளுக்குக் கட்டப்படும் அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீடுத் தொகை 2025-26 நிதியாண்டிலிருந்து 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.
'செங்கோட்டையன்' சலசலப்பு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கான அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவில், ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை’ என்ற காரணத்தைச் சொல்லி, நிகழ்ச்சியைப் புறக்கணித்திருப்பதோடு அதை விமர்சனமும் செய்திருந்தார் அக்கட்சியின் சீனியரான செங்கோட்டையன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/by43pf88/Sengottaiyan-3.jpg)
இந்த நிகழ்வு அ.தி.மு.க முகாமை அதிரவைத்திருந்தது. எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவுக்கு செல்லாத செங்கோட்டையன் ஸ்டாலின் தலைமையிலான மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்துக்கு வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "நானும் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். கடந்த ஆண்டும் கலந்துகொண்டேன்" என பதிலளித்திருக்கிறார்.
செங்கோட்டையன் நடவடிக்கைக்கு பின்னால் பாஜக இருக்கிறது, செங்கோட்டையன் ஓ.பி.எஸ் போல செயல்படுகிறார் என அதிமுகவில் சிலர் அவர்மீது விமர்சனம் வைத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் ஸ்டாலின் செங்கோட்டையன் கோரிக்கையை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றிருக்கிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play