கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
Humpback Whale அல்லது கூனல் முதுகு திமிங்கலம் ஒன்று கயாகிங் (சிறிய வகை படகில் பயணம் செய்வது) செய்த நபரை அப்படியே விழுங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சிலி நாட்டின் படகோனியா பகுதியில் எடுக்கப்பட்ட அந்த பகீர் வீடியோவில் முழு ஆளை விழுங்கும் திமிங்கலம் சில நொடிகளில் மீண்டும் அவரை வெளியே துப்புவதைப் பார்க்க முடியும். அந்த நபர் எந்தவித காயமும் இல்லாமல் தப்பிவிடுகிறார்.
என்ன நடந்தது?
அட்ரியன் சிமான்காஸ், என்ற நபர் சிறிய மஞ்சள் நிற படகில் சென்றுகொண்டிருந்தபோது அவரையும் படகையும் சேத்து விழுங்கியுள்ளது திமிங்கலம்.
கடலின் நடுவில் நடந்த அந்த திக் திக் நொடியை நினைவுகூர்ந்த அட்ரியன், "அது என்னை விழுங்கிவிட்டது என நினைத்தேன்" எனக் கூறியுள்ளார்.
அட்ரியனின் தந்தை டெல் இந்த மொத்த நிகழ்வையும் படம்பிடித்துள்ளார். அவர் அட்ரியன் ரிலாக்ஸாக இருக்கும்படி கூறுவதை வீடியோவில் பார்க்கலாம்.
திமிங்கலம் விழுங்கிய அதிர்ச்சியில் இருந்த அட்ரியனிடம், "துடுப்பை பிடி, ரிலாக்ஸ்... நான் வருகிறேன், கரைக்குப் போகலாம்" எனக் கூறுகிறார் டெல்.
A male kayaker was swallowed by a humpback whale off Chilean Patagonia before being released seconds later, unharmed.
— Channel 4 News (@Channel4News) February 13, 2025
Adrián Simancas was kayaking with his father, who filmed this video as the massive mammal suddenly surfaced. pic.twitter.com/0nuE6OP88s
விழுங்கப்பட்ட தருணம் குறித்து, "நீல நிறமும் வெள்ளை நிறமும் கலந்து ஏதோ ஒன்றைக் கண்ணருகில் பார்த்தேன். அடுத்த நொடி எனக்கு என்ன நடக்கிறது எனத் தெரிந்துவிட்டது. என்னை அது சாப்பிட்டுவிட்டது என நினைத்தேன்" என அச்சத்துடன் விவரித்துள்ளார் ஆட்ரியன்.
டெல், "நான் திடீரென திரும்பிப்பார்க்கையில் அவனைக் காணவில்லை. அப்போது மட்டும்தான் நான் அச்சப்பட்டேன். கிட்டத்தட்ட 3 நொடிகள் அவனைக் காணவில்லை" எனக் கூறியுள்ளார்.
நிபுணர்கள் சொல்வதென்ன?
திமிங்கலங்கள் பொதுவாக மனிதர்களையோ, படகுகளையோ விழுங்காது என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக Humpback Whales சிறிய தொண்டையைக் கொண்டிருப்பதால் அதனால் விழுங்க முடியாது.
கயாகிங் சென்ற நபர் திமிங்கலம் அதன் இரையை விங்கும் இடத்தில் சரியாக நின்றிருக்கலாம் என்கின்றனர். சிறிய படகை திமிங்கலாம் பார்க்காமல் இருந்திருக்கலாம் என்கின்றனர்.
இதுமாதிரியான சம்பவங்கள் மிகவும் அரிதானவை எனக் கூறியுள்ளனர்.