``வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன்" -கேரளா வந்த கும்பமேளா வைரல் பெண் மோனலிஸா!
கேரளாவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் போபி செம்மண்ணூர். நகைக்கடைகள் நடத்திவரும் இவர், தனது நிறுவனங்களின் திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நடிகைகளை அழைப்பது வழக்கம்.
நகைக்கடை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், தனது அனுமதி இல்லாமல் பொதுமக்கள் கூடியிருக்கும்போது மேடையில் வைத்து கழுத்தில் தங்க நெக்லஸ் அணிவித்து விட்டதாகவும் நடிகை ஹனிறோஸ் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போபி செம்மண்ணூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். தற்போதும் தனது நகைக்கடைகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நடிகைகளை அழைத்து வருகிறார். இந்த நிலையில் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் மாலை விற்பதற்காக வந்து அழகான கண்கள், மற்றும் புன்னகையால் சமுக வலைத்தளங்களில் வைரலான மோனலிஸா என அழைக்கப்பட்ட மோனி போஸ்லே-யை கோழிக்கோட்டில் தனது நகைக்கடை வைர நகைகள் பிரிவு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார் போபி செம்மண்ணூர்.

இன்று கோழிக்கோட்டுக்கு வந்திருந்த மோனி போஸ்லேவுக்கு போபி செம்மண்ணூர் ஸ்பெஷல் தங்க நெக்லஸ் அணிவித்து வரவேற்றார். அதன் விலை பத்தாயிரம் ரூபாய் என போபி செம்மண்ணூர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் 'வேட்டையனல்லே' என்ற பாடலுக்கு போபி செம்மண்ணூருடன் மோனி போஸ்லே நடனமாடினார். மேலும், ஹிந்தி பாடல் ஒன்றையும் அவர் பாடினார்.
வைரநகை பிரிவை திறந்துவைத்தபின் மோனின்போஸ்லே செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரளாவுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன். அனைவருக்கும் நன்றி" என்றார்.

போபி செம்மண்ணூர் பேசுகையில், "நான் கும்பமேளாவுக்கு போகவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் மோனி போஸ்லே குறித்து அறிந்தேன். பல ஆண்டுகளாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்று சாலையோரங்களில் மாலைகள் விற்பனை செய்த வைரத்தை நாடே கொண்டாடியது. அவரை நான் கேரளாவுக்கு அழைத்தேன்" என்றார்.
15 லட்சம் ரூபாய் வழங்கி மோனி போஸ்லேவை நகைக்கடை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனது நகைக்கடைகளின் பிராண்ட் அம்பாசிடராக மோனி போஸ்லோவை நியமிக்கும் நடவடிக்கையிலும் போபி செம்மண்ணூர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.