சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
``தேர்வு தேதி மறந்து விட்டது'' -மலையிலிருந்து 5 நிமிடத்தில் பாராசூட்டில் வந்து தேர்வு எழுதிய மாணவர்!
மகாராஷ்டிராவில் இப்போது கல்லூரி மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தேர்வுக்கு செல்லும் போது மாணவர்கள் சிலர் தங்களது ஹால் டிக்கெட்டை மறந்துவிடுவதுண்டு. ஆனால் ஒரு மாணவர் தனது தேர்வு தேதியையே மறந்துவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த சமர்த் மஹன்கடே என்ற அந்த மாணவர் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கிறார். அவர் மலை உச்சியில் வசித்து வருகிறார். ஆனால் அவரது கல்லூரி மலையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் மலையடி வாரத்தில் இருக்கிறது. மாணவர் சமர்த் வசிக்கும் பகுதி மலைப்பாங்கான இடம் என்பதாலும், அருகில் சுற்றுலா மையமான பஞ்ச்கனி இருப்பதாலும் எப்போதும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. எனவே மாணவர் சமர்த் படித்துக்கொண்டே சாலையோரம் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வந்தார்.

அவர் தனது தந்தைக்கு இதில் உதவி செய்து கொண்டிருந்தார். அவர் எழுதவேண்டிய தேர்வு ஏதோ ஒரு காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அத்தேர்வு எப்போது நடைபெறும் என்று தெரியாமல் இருந்தார். அவர் தனது கடையில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் போன் செய்து தேர்வு எழுத வரவில்லையா?. நான் கல்லூரிக்கு வந்துவிட்டேன். தேர்வு தொடங்கப்போகிறது என்று தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சமர்த் தேர்வு தொடங்க இன்னும் 10 நிமிடம் மட்டுமே இருப்பதை அறிந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
வழக்கமாக சமர்த் வசிக்கும் இடத்தில் இருந்து குறுகலான, வளைவுள்ள சாலையில் 15 கிலோமீட்டர் கடந்து செல்வதாக இருந்தால் குறைந்தது 30 நிமிடம் பிடிக்கும். அதுவரை தேர்வு காத்துக்கொண்டிருக்காது. தேர்வு எழுத எதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு என்ற நிலையில், திடீரென அங்கு பாராசூட் இயக்கும் கோவிந்த் ஞாபகம் வந்தது. உடனே கோவிந்திடம் சென்று அண்ணா தேர்வு தொடங்க இன்னும் 10 நிமிடம் தான் இருக்கிறது. எதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். உடனே 'தேர்வு தேதியை கூட ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லையா' என்று கேட்ட கோவிந்த் மாணவரின் அவசரத்தை புரிந்து கொண்டார். மாணவர் தேர்வு எழுதவேண்டும் என்று கூறியதால் கோவிந்த் தனது பாராசூட்டில் மாணவனை தேர்வு மையத்திற்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தார்.

உடனே தனது நண்பருக்கு போன் செய்து வீட்டில் இருந்து ஹால் டிக்கெட்டை மற்றும் தேர்வுக்கான பொருள்களை எடுத்து வரும்படி சமர்த் கேட்டுக்கொண்டார். அதற்குள் பாராசூட்டை கிளப்ப கோவிந்த் தயாரானார். தன்னை இறுக பற்றிக்கொள்ளும்படி கூறி பாராசூட்டை கோவிந்த் கிளப்பினார். பாராசூட் கிளம்பிய 5 நிமிடத்தில் சமர்த் தேர்வு எழுதவேண்டிய கல்லூரி வளாகத்திற்குள் சென்றது. மாணவர் பாராசூட்டில் சென்று கல்லூரி மைதானத்திலேயே இறங்கினார். அவரை பார்த்து அனைத்து மாணவர்களும் ஆச்சரியம் அடைந்தனர். மாணவர் பாராசூட்டில் இருந்து இறங்கி வேகமாக தேர்வு நடைபெறும் இடத்திற்கு ஓடினார். தேர்வு தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், தேர்வு மையத்திற்குள் மாணவர் சமர்த் போய் சேர்ந்தார்.
சமர்த் தேர்வு மையத்திற்குள் ஓடி வந்ததை பார்த்ததும் ஆசிரியரும், அவரை தேர்வு எழுத அனுமதித்தார். தேர்வு எழுதியபிறகு மாணவர் சமர்த் அளித்த பேட்டியில், ''குடும்பத்தை காப்பாற்ற நான் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்கிறேன். ஆனால் எனது படிப்பும் எனக்கு முக்கியம்" என்று தெரிவித்தார்.