Shikhar Dhawan: `ஆன்மிகம் வழியாகத்தான் என் மகனைப் பார்க்கிறேன்’ - அப்பாவாக வருந்தும் ஷிகர் தவான்
வருந்தும் தவான்
பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவரின் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்கமுடியாது. இடதுக் கை ஆட்டக்காரரான இவர் மைதானத்தில் இருந்தபோதெல்லாம் துடிப்புடன் செயல்பட்டவர். 2023-ம் ஆண்டு இவருக்கும் இவரின் மனைவிக்குமான திருமண உறவு விவாகரத்தில் முடிந்தது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஜோரவர் என்ற மகன் இருக்கிறார். விவாகரத்தால் இவரின் மகனை பராமரிக்கும் பொறுப்பு ஆஷா முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், ஷிகர் தவான் அவரின் மகனைக் பார்ப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில்,``நான் என் மகனைப் பார்த்து 2 வருடங்கள் ஆகிறது. கடைசியாக என் மகனுடன் பேசி ஒருவருடம் ஆகிறது. அவருடன் வீடியோவிலோ, செல்போனிலோ என்னால் பேசமுடியவில்லை. எல்லா இடத்திலும் பிளாக் செய்யப்பட்டிருக்கிறேன். எனக்கு என் மகனைப் பார்க்க வேண்டும், அவனுடன் பேசவேண்டும் என்று எப்போதெல்லாம் நினைப்பேனோ அப்போதெல்லாம் ஆன்மிக ரீதியில் அவருடன் உரையாடி விளையாடுகிறேன். அதாவது, தியானத்தில் அமர்ந்து அவருடன் பேசுவது போலவும், விளையாடுவதுபோலவும் என் சிந்தனையை உருவாக்குவேன். அப்படித்தான் ஒருவருடமாக என் மகனைப் பார்த்துவருகிறேன்.
அவர் சிரித்தால் நானும் சிரிப்பேன்
இதுபோன்ற நிலை ஏற்பட்டால், இப்படியான சூழலில் வாழ கற்றுக்கொள்வீர்கள். என் சோகமும், வருத்தமும் எதற்கும் உதவாது என்பதை அறிவேன். என் மகனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் அவரைக் கட்டிப்பிடிப்பேன். அவருடன் நேரத்தைச் செலவிடுவேன். அவர் சொல்வதைக் முழுமையாக, அமைதியாக கேட்பேன். என்னுடைய எந்த இன்னிங்ஸையும், திறமையையும் அவருக்குக் காண்பிப்பதைவிட அவரைப் பற்றி அறிந்து கொள்வேன். ஒருவேளை அவர் அழுதால் அவருடன் சேர்ந்து நானும் அழுவேன். அவர் சிரித்தால் நானும் சிரிப்பேன். அவருடன் என் நேரத்தை அனுபவிப்பேன்.
என் மகன் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்விரும்புகிறேன். நான் பிளாக் செய்யப்பட்டிருந்தாலும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை அவருக்கு எதாவது ஒன்றை எழுதி அனுப்புகிறேன். அவர் அவற்றைப் படிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் அவற்றைப் படிக்கவில்லை என்றாலும் எனக்கு கவலையில்லை. அவரைத் தொடர்பு கொள்வது என் வேலை. நான் அதைத் தொடர்ந்து செய்வேன்." எனப் பேசியிருக்கிறார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play