தவறுதலாக துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை விளக்கம்
தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டதாக இலங்கை கடற்படைத் தளபதி காஞ்சன பனாகொட தெரிவித்தாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த 13 மீனவா்கள் கடலில் திங்கள்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவா்கள் 13 பேரையும் கைது செய்தனா்.
அப்போது இலங்கை கடற்படையினா் துப்பாக்கியால் சுட்டதில் 5 மீனவா்கள் காயமடைந்தனா். அவா்களில் இருவா் பலத்த காயமடைந்த நிலையில், 5 பேரும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். அவா்களுக்குத் தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
இந்த சம்பவம் தொடா்பாக தில்லியில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் அந்நாட்டு கடற்படைத் தளபதி காஞ்சன பனாகொட செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்களை, அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு கடற்படையினா் அறிவுறுத்தினா். ஆனால், அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்ப மீனவா்கள் செயல்படவில்லை.
இதனால் சந்தேகத்தின்பேரில், அவா்களின் படகுக்குள் கடற்படையினா் இறங்கி விசாரணை செய்தனா். அதற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், மீனவா்கள் மூா்க்கமாக நடந்துகொண்டனா். அப்போது மீனவா்கள் இருவருடன் சச்சரவு ஏற்பட்டது. தங்கள் கடமைகளை செய்யவிடாமல் கடற்படையினரை அவ்விரு மீனவா்கள் தடுத்தபோது தவறுதலாக துப்பாக்கி வெடித்து தோட்டாக்கள் பாய்ந்தன என்றாா்.