செய்திகள் :

``தாக்கரே, பவார் பிராண்டுகளை அழிக்க பாஜக முயற்சி..'' - ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

post image

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் உத்தவ் தாக்கரே தனது தந்தை தொடங்கிய சிவசேனாவை மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் இழந்துள்ளார்.

இதே போன்று முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தான் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது சகோதரர் மகன் அஜித்பவாரிடம் பறிகொடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரத்பவாரும், தாக்கரேயும் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் இப்போது அவர்கள் தங்களது ஆதிக்கத்தை படிப்படியாக இழந்து வருகின்றனர்.

இது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''எனது தாத்தா பிரபோதங்கர் தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் முதல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அவருக்குப் பிறகு, பாலாசாகேப் தாக்கரே, அதைத் தொடர்ந்து என் தந்தை ஸ்ரீகாந்த் தாக்கரே இசையில் ஒரு முத்திரையைப் பதித்தார்.

பின்னர், உத்தவ் (தாக்கரே) மற்றும் நான் இருவரும் எங்கள் தாக்கத்தை ஏற்படுத்தினோம். அவர்கள்(பா.ஜ.க) பவார் மற்றும் தாக்கரேவின் பிராண்டுகளை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அது முடியாது. கட்சிகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மாறினாலும் தாக்கரே மற்று பவார் பிராண்ட்களை அழிக்க முடியாது.

ஒரு நிகழ்ச்சியில் அஜித்பவார், சுனில் தட்கரே, அசோக்சவான், சகன் புஜ்பால் ஆகியோருக்கு மத்தியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்தேன். அதனை பார்க்கும் போது இப்போது பா.ஜ.கவை ஆதரிக்கும் அஜித்பவார், சுனில் தட்கரே, சகன் புஜ்பால் ஆகியோர் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தேன்.

பா.ஜ.க அரசை அகற்ற அவர்கள் கடுமையாக போராடி விட்டு இப்போது அதே பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்கின்றனர் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது''என்றார்.

சிவசேனாவுடன் கூட்டணியா?

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்டதற்கு, ''நான் நேர்காணலில் தெரிவித்த ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு நீங்கள் யூகத்தில் செய்தி வெளியிடுகிறீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நான் சொன்ன ஒரு தகவலை மீண்டும் ஏன் சொல்லவேண்டும். பல அரசியல்வாதிகள் இது குறித்து அறிக்கை வெளியிடுகின்றனர்'' என்றார்.

பஹல்காம் தாக்குதல்

பாகிஸ்தான் தாக்குதல் குறித்து கேட்டதற்கு, ''பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள். இந்தியா பாகிஸ்தான் மீது தாக்கியது. இதில் நாம் நினைத்ததை சாதிக்க முடிந்தது. ஆனால் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இன்னும் தலைமறைவாக இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள். தீவிரவாதிகளை அழிக்க போர் தீர்வாகாது. காசாவில் நடந்த போரால் ஏற்பட்ட அழிவை பார்த்து போரால் என்ன ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்'' என்றார்.

ராஜ்தாக்கரே பேச்சில் மாற்றம்

ராஜ் தாக்கரே சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில், ''உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி அமைத்து மராத்தியர்களுக்காக பாடுபட தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு உத்தவ் தாக்கரேயும் சாதகமாக பதில் கொடுத்திருந்தார். அதன் பிறகுதான் ராஜ்தாக்கரேயின் பேச்சில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

பா.ஜ.க ஆதரித்து பேசி வந்த ராஜ்தாக்கரே சமீப காலமாக அதனை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளார். ராஜ்தாக்கரே கட்சி அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்படும் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

``பொறுப்புகளில் சேரவிடாமல் தடுக்கும் `யார் அந்த சார்?' '' - ராமநாதபுரம் பா.ஜ.க-வில் போஸ்டர் யுத்தம்!

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக, தேசிய குழு உறுப்பினராக கே.முரளிதரன் மாநில தலைமையினால் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மாநில தலைவராக பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்தி... மேலும் பார்க்க