உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: நீதி ஆயோக் செயல் அதிகா...
கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்ப்பாக கப்பலில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை(மே 24) கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சிக்கு புறப்பட்ட லைபீரிய சரக்கு கப்பல் எம்எஸ்சி எல்சா 3, சனிக்கிழமை இரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலை 7.50 மணியளவில் கொச்சி அருகே அரபிக் கடலில் மூழ்கியது.
இந்த விபத்தின்போது, கப்பலில் ரஷியா, உக்ரைன், ஜார்ஜியா,பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்கள் என 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணியில் இந்தியக் கடலோரக் காவல்படை ரோந்து கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களான எம்வி ஹான்யி மற்றும் எம்எஸ்சி சில்வர் 2 ஆகியவை ஈடுபட்டன. நல்வாய்ப்பாக 21 பேரை இந்தியக் கடலோரக் காவல்படையும்,3 பேரை இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதாவும் மீட்டன.
பிரதமர் மோடி மே 26, 27 இல் குஜராத் பயணம்
கடலில் மூழ்கிய எம்எஸ்சி எல்சா 3 கப்பலில் இருந்த 640 கன்டெய்னர்களில், 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள், 13 டன் ஆபத்தான எரிபொருளும், 12 டன் கால்சியம் கார்பைடு, 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், விபத்துக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதனிடையே, கப்பல் கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.
மேலும், மேம்பட்ட எண்ணெய் கசிவு கண்டறிதல் அமைப்புகள் பொருத்தப்பட்ட ஐசிஜி டோர்னியர் விமானங்கள் வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன, ஐசிஜி கப்பல் சாக்ஷாம், அந்த இடத்தில் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.