தோனியிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்வி; பதிலால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தோனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: அபார வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்த சிஎஸ்கே!
இந்த வெற்றியின் மூலம், சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியை வெற்றியுடன் முடித்துள்ளது. இன்றையப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய டெவால்ட் பிரேவிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
தோனியின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு, அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என தோனியிடம் எப்போதும் வழக்கமாக கேட்கப்படும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தோனி பேசியதாவது: இன்றைய போட்டி சிறப்பாக இருந்தது. திடல் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். நடப்பு ஐபிஎல் தொடர் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. நாங்கள் சிறப்பாக செயல்பட்ட போட்டிகளில் இன்றையை போட்டியையும் கூறலாம். முந்தைய போட்டிகளில் ஃபீல்டிங்கில் தவறு செய்தோம். இன்று வீரர்கள் நன்றாக ஃபீல்டிங் செய்து கேட்ச் பிடித்தார்கள்.
இதையும் படிக்க: பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த ஜோஸ் ஹேசில்வுட்!
அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் எனக்கு 4-5 மாதங்கள் இருக்கின்றன. அந்த முடிவை எடுக்க எந்த ஒரு அவசரமும் இல்லை. நன்றாக முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்பதற்காக ஓய்வு பெற வேண்டுமென்றால், சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெறுவார்கள்.
ஐபிஎல் தொடர் நிறைவடைந்துவிட்டது. ராஞ்சிக்கு சென்று மகிழ்ச்சியாக சில பைக் ரைடுகள் செல்ல வேண்டும். ஐபிஎல் தொடரில் எனது பயணம் முடிந்துவிட்டது எனக் கூறவில்லை. அதேசமயம், நான் அடுத்த ஐபிஎல் தொடருக்கு திரும்பி வருகிறேன் எனவும் கூறவில்லை. எனக்கு முடிவு எடுப்பதற்கு நிறைய கால அவகாசம் இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரை சேப்பாக்கம் திடலில் தொடங்கினோம். முதல் நான்கு போட்டிகள் சென்னையில் விளையாடினோம். அந்த போட்டிகளில் நாங்கள் இரண்டாவது பேட்டிங் செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனால், ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்ததாக நான் உணர்ந்தேன். வீரர்களின் பேட்டிங் குறித்து கவலையாக இருந்தது. தற்போது, எங்களால் வெற்றி பெறுவதற்கு தேவையான ரன்களை குவிக்க முடிகிறது. ஆனால், இன்னும் சில ஓட்டைகளை அடைக்க வேண்டியிருக்கிறது. அடுத்த சீசனுக்கான சிஎஸ்கே அணி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் நிறைய கவலைப்பட வேண்டியிருக்காது என்றார்.