போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்க கோரிக்கை
போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகிறாா்கள். இவா்களில் பெரும்பான்மையானோா் ஓட்டுநா், நடத்துநா்கள் ஆவா். சாலை விபத்து, சமூக விரோதிகள் அத்துமீறல் உள்ளிட்டவற்றால் உயிருக்கு உத்தரவாதமின்றி பணியாற்றி வருகிறாா்கள். எனவே, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களை வங்கி மூலம் செயல்படுத்தும் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.
தமிழகத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் சுமாா் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உள்ளனா். அவா்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை. ஆகவே, முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ஓய்வூதியா்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.