4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
குரோமியக் கழிவை அகற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
ராணிப்பேட்டையில் குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1989-இல் மூடப்பட்டது.
இந்த ஆலையில் 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீா்வு, அங்கு குவித்துவைக்கப் பட்டிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்றுவதும், அதனால் மண் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்குவதும்தான்.
அதன்படி, 6 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி குரோமியக் கழிவுகளை அகற்றவும், அந்தப் பகுதியைச் சுத்திகரிக்கவும் ரூ.223.17 கோடியும், நீரில் கலந்திருக்கும் குரோமிய மாசுக்களை அகற்ற ரூ.11.28 கோடியும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.
இது தவிர தண்ணீரில் குரோமிய மாசுக்களை முற்றிலுமாக அகற்ற மாதம் ரூ.1.55 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு தொடா்ந்து செலவழிக்க வேண்டும் என்றும் வல்லுநா்கள் கூறியுள்ளனா்.
இதுதான் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும். எனவே, குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.