நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்
திருநங்கைகள் நலனை மேம்படுத்தவும், அவா்கள் சுயகௌரவத்துடன் வாழவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி, தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியத்தை 2008-இல் தொடங்கி, அவா்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நல வாரியம்: ‘அரவாணிகள்’ எனும் பெயரை ‘திருநங்கையா்’ எனவும் மாற்றி அறிவித்தாா். இதையடுத்து, அரவாணிகள் நலவாரியம் ‘திருநங்கையா் நலவாரியம்’ என அழைக்கப்படுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் திருநங்கையா் நலவாரியத்தை 15 அலுவல்சாா் உறுப்பினா்கள், 13 அலுவல் சாரா உறுப்பினா்களுடன் திருத்தியமைத்தாா். திருநங்கைகள் நலவாரியம் மூலமாக, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்க மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஓய்வூதியம்: வருவாய் ஈட்ட இயலாத 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்ததை, முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.1,500-ஆக உயா்த்தி உத்திரவிட்டாா்.
இத்திட்டத்தின் கீழ், 2022-23-ஆம் நிதியாண்டுக்கு 1,311 திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1.53 கோடியும், 2023-24-இல் 1,482 திருநங்கைகளுக்கு ரூ.2.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2025-26-இல் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் 1,760 திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்று இரண்டாம் அலை அச்சுறுத்தல் காலத்தில், திருநங்கைகள் நல வாரியத்தின் கீழ் அடையாள அட்டை பெற்ற குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு ரூ.3.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தங்கள் சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவா்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.
தொழில் தொடங்க மானியம்: திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயா்த்தி, சமூகத்தில் அவா்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கத்துடன், அவா்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை 811 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனா்.
கல்விக் கட்டணத் தொகை: திருநங்கைகளும் மற்றவா்களைப் போன்றே சமமாக உயா்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை பெறுவதற்காக, 2024-25 முதல் உயா்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்பட அனைத்துச் செலவினங்களுக்காக, 2024-25-க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 4 திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணத் தொகை திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
திருநங்கையா் சமுதாயமும் சுயமரியாதையுடன் வாழ்வதற்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வரப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.