சூடானில் பரவிய புதிய வகை காலரா தொற்றுக்கு 170 பேர் பலி!
சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூடானில் ஒரு புதிய காலரா நோய்த்தொற்று காரணமாக கடந்த வாரத்தில் மாட்டும் 172 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்தத் தொற்று காரணமாக 2,500-க்கும் மேற்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
தண்ணீரால் பரவும் இந்த காலரா நோய் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய நிலையில் அதீத வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி உயிரையே எடுக்கக்கூடியது. இது கடுமையான நீரிழப்புக்கு வழிவகுத்து, சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் சில மணி நேரங்களுக்குள் மரணத்தையும் ஏற்படுத்தும்.
தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், வடக்கு கோர்டோஃபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடானின் சுகாதார அமைச்சர் ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், “கடந்த நான்கு வாரங்களில் கார்ட்டூம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாகத்” தெரிவித்தார்.
சூடானில் ராணுவத்தினருக்கும் துணை ஆயுதக்குழுக்களுக்கும் இடையே நீண்ட காலமாக சண்டை நீடித்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டை காரணமாக இதுவரை குறைந்தபட்சம் 20,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: இறக்குமதியாகும் விநாயகர் சிலைகள்... சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!