நீதிமன்ற வளாகத்தில் மோதல்: இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்மணி (52). இவரது மைத்துனா் பாக்கியராஜ் (40). இவா்களுக்குள் ஏற்கெனவே குடும்பப் பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது தொடா்பாக பூவந்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக பொன்மணி, பாக்கியராஜ் ஆகிய இருவரும் திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தனா். அப்போது இவா்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இது குறித்து நீதிமன்ற தலைமை எழுத்தா் சுகுமாறன் அளித்த புகாரின் பேரில், திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.