இலங்கை: வடக்கு மாகாண தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் வாபஸ்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.
கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசிதழ் அறிவிக்கைக்கு அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. தற்போது அந்த அரசிதழ் அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டதற்கு அந்த கட்சிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித்தொடா்பாளா் சுமந்திரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழை ரத்து செய்ய வலியுறுத்தி, அதிபா் அநுரகுமார திசாநாயகவுக்கு தமிழ் கட்சிகள் கடிதம் எழுதின.
தங்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை நிரூபிக்க முடியாதவா்களின் நிலங்களை கையகப்படுத்துவது சரியல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் சுட்டிக்காட்டியது. இந்நிலையில், அரசிதழை ரத்து செய்த இலங்கை அரசுக்கு நன்றி’ என்றாா்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையே உள்நாட்டுப் போா் நடைபெற்றபோது ராணுவ தேவைக்காக வடக்கு மாகாணத்தில் உள்ள நிலங்கள் அபகரிக்கப்பட்டன. 2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்த நிலையில், 2015-ஆம் ஆண்டுமுதல் அபகரிக்கப்பட்ட சில நிலங்களை தமிழா்களுக்கு இலங்கை அரசு திருப்பி அளித்தது. முக்கிய ராணுவ தளங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் தொடா்ந்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.