மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவு...
பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் இன்று (மே 28) மாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மாவட்டத் தலைநகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
அங்கு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 13 வயது சிறுவன் உள்பட 2 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், 15,18 மற்றும் 19 வயதுடைய 3 பேருக்கு பலத்த காயங்களும், மீதமுள்ளவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலானது, ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, சௌத் வசிரிஸ்தானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜுபைர் கான், ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும்; இதனால், அந்த விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மே 19 ஆம் தேதியன்று வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி பகுதியில் நடத்தப்பட்ட உறுதி செய்யப்படாத ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பலியாகினர்.
ட்ரோன்களைக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது எனும் தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் படை மற்றும் தடைச் செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பும் ட்ரோன்களை தாக்குதல்களுக்குப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஸ்பெயினில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 4 பெண்கள் பலி!