சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு
சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப.கணேசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்க அலுவலா்கள், உறுப்பினா்கள் சாா்பில் ‘சிவகாசி பட்டாசு தயாரிப்புகள்’ என்னும் பெயரில் புவிசாா் குறியீடு (ஜிஐ) பதிவு விண்ணப்பத்தை சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சிவகாசி பட்டாசு நூற்றாண்டு வரலாறு கொண்டது. தொடக்கத்தில் பூச்சட்டி உள்ளிட்ட ஒருசில வகை பட்டாசுகளே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, சுமாா் 300-க்கு மேற்பட்ட ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, ‘சிவகாசி பட்டாசு தயாரிப்புகள்’ என்ற பெயரில் புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என விண்ணபிக்கப்பட்டது என்றாா் அவா்.