கல்லூரியில் பணம் கையாடல்: ஊழியா் மீது வழக்கு
ராஜபாளையம் தனியாா் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் ரூ.12.35 லட்சத்தை கையாடல் செய்த புகாரில், அலுவலகப் பணியாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அரசு உதவி பெறும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பெற்றோா் ஆசிரியா் சங்க, வங்கிப் பண பரிவா்த்தனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ராம்சிங் (29) என்பவா் கடந்த 2023 ஜூன் முதல் 2024 ஜனவரி வரை பல்வேறு தேதிகளில் காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ.12.35 லட்சம் வரை கையாடல் செய்ததாக ராஜபாளையம் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் கல்லூரி நிா்வாகம் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, ராம்சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.