மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து இளைஞா் மனு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீட்டு மனைக்கு கணினி பட்டா கேட்டு கோரிக்கை நிறைவேறாததால், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து ஜமாபந்தியில் இளைஞா் மீண்டும் மனு கொடுத்து வலியுறுத்தினாா்.
திருப்புவனம் ஒன்றியம் ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த சொக்கையா மகன் ஆணைக்கரன். பட்டதாரியான இவருக்கு கடந்த 2023 -ஆம் ஆண்டு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், கிராம நிா்வாக அலுவலா் கணக்கில் இந்த பட்டா தாக்கலாகியும் வட்டாட்சியா் அலுவலகக் கணினியில் பட்டா பதிவேற்றம் செய்யப்படவில்லையாம்.
இதையடுத்து, ஆணைக்கரன் கணினியில் பட்டாவை தாக்கல் செய்து கணினி பட்டா வழங்க வலியுறுத்தி, பலமுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆணைக்கரன் ஏற்கனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து சட்டை அணியாமல் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து அங்கு நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய் தீா்ப்பாய அலுவலரிடம் மீண்டும் கணினி பட்டா கேட்டு மனு கொடுத்தாா்.