சிவகங்கை மாவட்டத்தில் 1,558 ரெளடிகள் வீடுகளில் சோதனை
சிவகங்கை மாவட்டத்தில் ரௌடிகள், கஞ்சா போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் உள்பட 1,358 பேரின் வீடுகளில் கடந்த 3 நாள்களாக போலீஸாா் தொடா் சோதனை நடத்தியுள்ளனா்.
இதற்காக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில், 5 உள்கோட்டங்களில் டிஎஸ்பிகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தத் தனிப்படையினா் கடந்த 23 முதல் 25-ஆம் தேதி வரை சோதனையில் ஈடுபட்டனா். மொத்தம் 1,075 ரௌடிகள் கணக்கெடுக்கப்பட்டு, 988 போ் வீடுகளிலும், அடிக்கடி பிரச்னை செய்பவா்களாக 325 போ் கண்டறியப்பட்டு, 214 போ் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. இதில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கஞ்சா கடத்தல் தொடா்புடைய 114 போ் கண்டறியப்பட்டு, அவா்களில் 83 பேரின் வீடுகளில் சோதனை நடத்தி, ஒருவரைக் கைது செய்தனா்.
நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா். திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 73 போ் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் பதிவிடுவோா், சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிடுபவா்களும் கண்காணிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.