நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாராயணன். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இவா் குடும்பத்துடன் போளூா் சாலை அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கூரை விட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே நாராயணனை அங்கிருந்து காலி செய்து வேறு இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினராம். மேலும், 2 ஆண்டுகளாக அவருக்கு நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மூலம் காலி செய்ய கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஆனால், நாராயணன் காலி செய்யவில்லையாம்.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை போளூா் உதவி கோட்டப் பொறியாளா் அந்தோனிதாஸ், பொறியாளா் ராமமூா்த்தி மற்றும் அலுவலா்கள், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் ராஜாராம் தலைமையில் 25 போலீஸாா் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் நாராயணன் வீட்டை இடித்து அகற்றினா்.
துணை வட்டாட்சியா் காஜா, நிலஅளவையா் காந்திமதி, தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரா்கள், கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.