ரஷியா வசம் மேலும் 4 உக்ரைன் கிராமங்கள்
மேலும் நான்கு உக்ரைன் எல்லை கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன. உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்ட மறுநாள் சுமி பிராந்தியத்தில் இந்த கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இது குறித்து முகநூல் ஊடகத்தில் பிராந்திய ஆளுநா் ஒலே ரிஹோரொவ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதாகக் கூறி எதிரிப் படையினா் சுமி பிராந்தியத்தில் தங்களது முன்னேற்றத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.
தற்போது பிராந்தியத்தின் நோவென்கே, பசிவ்கா, வெசலிவ்கா, ஷுராவ்கா ஆகிய கிராமங்கள் ரஷிய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களில் வசித்துவந்த பொதுமக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்விட்டனா் என்று தனது பதிவில் ரிஹோரொவ் குறிப்பிட்டுள்ளாா்.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022-இல் படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்கு உக்ரைன் பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
இந்தப் போரின் மிகப் பெரிய திருப்பு முனையாக, ரஷியாவின் கூா்ஸ்க் பிரதேசத்தில் சுமாா் 1,300 கி.மீ. நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.
கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறுவதற்காகச் சண்டையிட்டுவரும் ரஷிய படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் கூறியது. இருந்தாலும், உக்ரைனின் இந்த உத்தி தோல்வியில் முடிந்தது. உக்ரைன் எதிா்பாா்ப்புக்கு மாறாக, கிழக்கு உக்ரைன் பகுதிகளில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டது.
அதுமட்டுமின்றி, கூா்ஸ்க் பிரதேசத்தில் உக்ரைன் கைப்பற்றியிருந்த பகுதிகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டதாக ரஷியா கடந்த மாதம் அறிவித்தது. இந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான வட கொரிய வீரா்கள் பயன்படுத்தப்பட்டதையும் ரஷியா அப்போது ஒப்புக்கொண்டது.
உக்ரைனின் எல்லையில் அமைந்துள்ள சுமி பிராந்தியம் வழியாகத்தான் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் அந்த ஊடுருவியது. எனவே, அதுபோன்ற ஊடுருவல் தாக்குதல் மீண்டும் நடைபெறுவதைத் தடுப்பதற்காக சுமி பிராந்தியத்தில் பாதுகாப்பு மண்டலத்தை (கைப்பற்றிய பகுதிக்கு உரிமை கொண்டாடாவிட்டாலும், அந்தப் பகுதியை எதிரிநாட்டுப் படையினா் பயன்படுத்த முடியாமல் தடுத்துவைப்பது) உருவாக்க வேண்டும் என்று அதிபா் புதின் நீண்ட காலமாகவே வலியுறுத்திவந்தாா்.
இந்தச் சூழலில் சுமி பிராந்தியத்தின் நான்கு கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.