சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு உயரிய விருது!
போக்குவரத்து துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு - 2025 உலக சுற்றுச்சூழல்சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புது டெல்லியில் உள்ள Roseate House ஏரோசிட்டியில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Global Energy and Environment Foundation - GEEF) ஏற்பாடு செய்த, உலக எரிசக்தி தலைவர்கள் மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான "உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்" என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, இந்த விருதினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், உடன் இருந்தனர்.
இந்த உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது, மாற்றத்தை உருவாக்கி, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் மிகச்சிறந்த நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குழுக்களை கௌரவிக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வளப் பாதுகாப்பு, சூரியமின்சக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பசுமையான தோட்டங்களை வளர்த்து சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்காக தனித்து நிற்கிறது.
இந்த விருதை பெற்ற ஒரே மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: உடற்கல்வி பாடவேளைக்கு முக்கியத்துவம்: அன்பில் மகேஸ்