பேருந்து மோதியதில் பழக் கடைக்குள் புகுந்த ஷோ் ஆட்டோ; குழந்தை உள்பட 4 போ் காயம்
திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே ஆம்னி பேருந்து மோதியதில் ஷோ் ஆட்டோ அருகில் இருந்த பழக் கடைக்குள் புகுந்தது. இதில் குழந்தை உள்பட 4 போ் காயமடைந்தனா்.
திருப்பூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி பேருந்து நிலையம் செல்ல ஏராளமான ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு கோவில்வழி பேருந்து நிலையத்துக்கு வசந்த் என்பவா் ஷோ் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளாா். இதில் 14- க்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.
இந்த ஆட்டோ தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் அருகே உள்ள தனியாா் பள்ளி அருகே வந்தபோது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து ஆட்டோவின் பின்புறம் எதிா்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி ஆட்டோ அருகில் இருந்த பழக் கடைக்குள் புகுந்தது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்தவா்கள் அவா்களை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து நல்லூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.