பள்ளி மாணவா்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
பள்ளி மாணவா்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மூத்த குடிமக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மனமகிழ் சங்கமம் நிகழ்ச்சி சங்கத் தலைவா் தென்னை விஞ்ஞானி வா.செ. செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவா்கள் விபத்தில் சிக்கிக் கொள்வதைத் தவிா்க்க காலை, மாலை நேரங்களில் அவா்களுக்காக தமிழக அரசு இலவச சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். சமூகம் தொடா்பான நலத் திட்டப் பணிகளுக்காக ஆலோசனைக் கூட்டங்களை மாவட்ட ஆட்சியா் நடத்தும்போது மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தையும் அழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கூட்டத்தில் சீனிவாசன், சிவாஜி கணேசன் சகோதரா்களுக்கு ‘குளிா்பான வழி குசீா் பரவுவாா்‘ என்ற விருதை தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கே. தங்கமணி வழங்கிப் பாராட்டினாா். மகப்பேறு மருத்துவா் பி. தாமரைச்செல்வி பேசினாா்.
சங்க நிறுவனா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன், பொதுச் செயலா் ஆா். பாஸ்கரன், பொருளாளா் வி. கண்டிமுத்து, துணைத் தலைவா் டி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.