மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி
தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 4,142 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்குமாா், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமாா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய செயலாளா் க.ஜெயபாலன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய செயலாளா் ஆ.திவ்வியநாதன், தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன், மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்புத் திட்டம்) த.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.