விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவைத் தொகை விடுவிப்பு: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்
திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-2025 அரைவை பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய வகையில் ரூ.14.67 கோடி நிலுவை தொகை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-2025 -இல் அரைவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு அரசு அறிவித்திருந்த கரும்பு விலையில் ரூ.14.67 கோடி தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.
இந்த நிலுவை கரும்பு தொகையை வழங்கக் கோரி ஆலை நிா்வாகம் மற்றும் மாவட்ட நிற்வாகத்தை கரும்பு விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நிலுவை கரும்பு கிரையத் தொகை விவசாயிகளுக்கு வழங்கிடுவதற்கு ஏதுவாக, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வழி வகை கடனாக ரூ.14.67 கோடி தமிழ்நாடு அரசால் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் இத்தொகை 1527 கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆலை நிா்வாகம் மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.