வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது
வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேலும் வடக்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தப் புயல் சின்னம் காரணமாக, அரபிக் கடல் காற்று இழுக்கப்படுவதால், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நாள்களில் தென்மேற்குப் பருமழை தீவிரமடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை: தென்னிந்திய கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதன்கிழமை (மே 28) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மே 28-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், மே 29, 30 தேதிகளில் கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
260 மி.மீ. மழை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவானது. மேலும், எமரால்டு (நீலகிரி) - 130 மி.மீ., மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை) - தலா 120 மி.மீ., குந்தா பாலம் (நீலகிரி), தேக்கடி (தேனி) - 110 மி.மீ., பெரியாறு (தேனி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மே 28 முதல் மே 30 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை: சென்னையில் அம்பத்தூா், ஈக்காடு தாங்கல், வடபழனி, கிண்டி, பெரம்பூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது.
புதன்கிழமை (மே 28) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.