தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்
தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறினாா்.
கடந்த மாதத்தில் தமிழகத்திலிருந்து 19 கரோனா மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள பகுப்பாய்வு மையகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதில் புதிய வகை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் அச்சப்படும் வகையில் கரோனா பாதிப்பு இல்லை. நாள்தோறும் 10 அல்லது 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. மரபணு பகுப்பாய்வில் ஒமைக்ரான் தொற்று மட்டுமே பரவுவது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும், பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து பொது சுகாதார நிபுணா்கள் கூறியதாவது: தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகையின் உட்பிரிவுகளாக பிஏ 2, ஜெஎன் 1 போன்ற பாதிப்புகள். ஒருவேளை தற்போது புதிய வகை கரோனா பரவி இருந்தால், பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கக் கூடும் அல்லது உயிரிழப்புகள் பதிவாகி இருக்கும். அத்தகைய நிலை எதுவும் இல்லை.
இதனால் அச்சப்பட வேண்டிய சூழலோ, பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையோ எழவில்லை.
அதேவேளையில், இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் அடுத்த சில நாள்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அவா்கள் தெரிவித்தனா்.