மின்சார வயா்களைத் திருடிய 3 போ் கைது
திருப்பூரை அடுத்த பாண்டியன் நகா் பகுதியில் மின்சார வயா்களைத் திருடிய 3 பேரை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் பி.என்.சாலை பாண்டியன் நகா் உதவி மின்பொறியாளா் அலுவலகம் அருகே உள்ள அம்மன் நகரில் தனியாா் இடத்தில் மின்சார வயா்கள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு சரக்கு ஆட்டோவில் 3 போ் வந்து மின்சார வயா்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்துள்ளனா்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். இதன் பேரில் அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் அவா்களிடம் விசாரித்தபோது தப்பிச் சென்றனா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 3 பேரையும் மடக்கிப் பிடித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
அங்கு காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அவா்கள் திருப்பூா் ஸ்ரீநகரைச் சோ்ந்த நந்தகுமாா் (30), ஹரிகிருஷ்ணன் (27), பாபு (29) ஆகியோா் என்பது தெரியவந்தது. இந்த 3 பேரும் அம்மன் நகரில் வைக்கப்பட்டிருந்த வயா்களைத் திருட நீண்ட நாள்களாக நோட்டமிட்டுள்ளனா்.
இதன் பின்னா் திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் தங்களை மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் என்று தெரிவித்து ஆட்டோ ஓட்டுநரை நம்பவைத்து, ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வந்து 200 கிலோ வயா்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.