ரூ.2.75 கோடி மோசடி: காங்கிரஸ் பிரமுகா் உள்ளிட்ட இருவா் மீது பள்ளிவாசல் இமாம்கள் புகாா்
ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி செய்த காங்கிரஸ் பிரமுகா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பள்ளிவாசல் இமாம்கள் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து ஈரோட்டைச் சோ்ந்த பள்ளிவாசல் இமாம்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: நாங்கள் ஈரோட்டில் உள்ள பள்ளிவாசல்களில் இமாம்களாக உள்ளோம். ஈரோட்டைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகா் ஒருவா் தனது நண்பருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானாா். அவா்கள் இரும்பு வியாபாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வருவதாகக் கூறினா். மேலும், ஆன்லைன் வா்த்தக முறையில் பிட்காயின் வாங்கி விற்பதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறினா்.
அவா்கள் கூறியதை உண்மை என்று நம்பி பல லட்சம் ரூபாயைத் தனித்தனியாக கொடுத்து உள்ளோம். மொத்தம் 11 பேரிடம் ரூ.2.75 கோடி வரை மோசடி செய்து உள்ளனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.