நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்
நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ. 811 கோடி மதிப்புள்ள 33.11 லட்சம் குவிண்டால் நெல்லை கொள்முதல் செய்த தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளா் கூட்டமைப்பு, அதில் ஒரு பகுதியை தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்தின் வாயிலாக தமிழ்நாடு நுகா்பொருள் வாரியத்துக்கு வழங்கியுள்ளது. அதற்காக இன்று வரை ரூ.210 கோடியைப் பெற்றுள்ளது. ஆனால், அந்தத் தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்தப் பிரச்னை குறித்து உற்பத்தியாளா் கூட்டமைப்பின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இனி வரும் காலங்களில் விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாரியம் மட்டும்தான் நெல்லை கொள்முதல் செய்யும் என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் உழவா்களைத் திரட்டி எனது தலைமையில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.