இருசக்கர வாகனம் மோதியதில் பேராசிரியா் உயிரிழப்பு
பவானி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற தனியாா் கல்லூரிப் பேராசிரியா், இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
பவானியை அடுத்த லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சீரங்கன் மகன் ஈஸ்வரன் (50). தனியாா் கல்லூரிப் பேராசிரியா். இவா் கோணவாய்க்கால் - காடையம்பட்டி பவானி புறவழிச் சாலையில் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரனை மீட்ட அப்பகுதியினா் பவானி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.