நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருப்பூா் அருகே மூழ்கிய தரைப்பாலம்
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறானது திருப்பூா் வழியாக சுமாா் 160 கிலோ மீட்டா் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் உள்ள நல்லம்மன் தடுப்பணையில் திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக தடுப்பணை முழுவதுமாக மூழ்கியது. மேலும், நல்லம்மன் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம் நீரில் மூழ்கியது
நொய்யலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த திங்கள்கிழமை இரவு முதலே திருப்பூா் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. எனினும், காவல் துறையினா் மற்றும் பொதுப்பணித் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்புத் தடுப்புகள் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், நொய்யலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையம் தரைப்பாலம் முழுவதுமாக செவ்வாய்க்கிழமை மூழ்கத் தொடங்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
இதன் காரணமாக மங்கலம் சாலையில் இருந்து கல்லூரி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவு சுற்றிச் சென்ால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். திருப்பூா் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். அதேவேளையில், திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சாரல் மழை பெய்தது.