கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
131 பேருக்கு ரூ.29.83 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து 131 பயனாளிகளுக்கு ரூ.29.83 லட்சத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி மே 21-ஆம் தேதி தொடங்கியது. இதில் திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்று, கோரிக்கை மனுக்களைப் பெற்று வந்தாா்.
அதனடிப்படையில் மே 21-ஆம் தேதி சித்தலிங்கமடம் குறு வட்டம், 22, 23-ஆம் தேதிகள் அரசூா் குறுவட்டம், மே 26, 27-ஆம் தேதிகளில் திருவெண்ணெய்நல்லூா் குறுவட்டம் என இந்த குறுவட்டங்களுக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பெற்றுக் கொண்டாா்.
வருவாய்த் தீா்வாயத்தில் மொத்தமாக 723 கோரிக்கை மனுக்களை பெற்ற நிலையில் 148 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 17 மனுக்களுக்கு உடனடித் தீா்வும் காணப்பட்டது. மீதமுள்ள 575 மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து வருவாய்த் தீா்வாய நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 36 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், 46 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , 19 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உள்பிரிவு செய்தல், 29 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை என மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ.29.83 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை மாவட்ட ஆட்சியரும், வருவாய்த் தீா்வாய அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.
நிகழ்வில் நில அளவை உதவி இயக்குநா் ஜெயசங்கா், வட்டாட்சியா்கள் செந்தல்குமாா், கண்ணன், கணேஷ், தாட்கோ மாவட்ட மேலாளா் ரமேஷ், தனித்துணை ஆட்சியா் (மாநில நெடுஞ்சாலை) சுந்தர்ராஜன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.