சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது: மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்க உத்தரவு
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சுழற்கேடயங்கள் வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக சிறந்த மூன்று அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து பட்டியல் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கல்விப் பணியில் முன்னேற்றம் காணும் வகையிலும், பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மாவட்டத்திலுள்ள மூன்று சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்து மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளுக்கு 114 கேடயங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அவற்றின் தலைமை ஆசிரியா்களிடம் கடந்த ஆண்டு நவ. 14-இல் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்.
இந்த நிலையில் 2024-2025-க்கான சிறந்த அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை பள்ளிக் கல்வித் துறை தற்போது தொடங்கியுள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்க வேண்டும். தொடா்ந்து அக்குழுவினா் பள்ளிகளை திடீரென ஆய்வு செய்து தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவா்.
15 அம்ச மதிப்பீடு: தர மதிப்பீட்டின் போது மாணவா் சோ்க்கையை அதிகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் செயல்பாடு, கற்றல் அடைவு, இணைச் செயல்பாடுகளின் மேம்பாடு, கற்பித்தலில் புதிய உத்திகள், பள்ளியின் உள் கட்டமைப்பு, குடிநீா்கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் என 15 முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
மொத்த மதிப்பெண் 150 ஆகும். அதில் 135-150 வரை பெறும் பள்ளிகளுக்கு மூன்று நட்சத்திரங்களும், 112-135 பெறும் பள்ளிகளுக்கு இரண்டு நட்சத்திரங்களும், 112-க்கு கீழ் மதிப்பெண் பெறும் பள்ளிகளுக்கு ஒரு நட்சத்திரம் என தரக்குறியீடு வழங்கப்படும். ஆய்வுக் குழுவினா் கடந்த ஆண்டுகளில் தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளை மீண்டும் தோ்வு செய்யக் கூடாது.
முதல் மூன்று இடங்களைப் பெறும் சிறந்த பள்ளிகளின் பெயா்ப் பட்டியலை மின்னஞ்சலில் ஜூன் 20-ஆம் தேதிக்குள்ளும், விரைவு அஞ்சலில் ஜூன் 30-ஆம் தேதிக்குள்ளும் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.