4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
கொடுங்கையூா் குப்பை எரி உலை திட்டம்: சீமான் கண்டனம்
சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
வடசென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தில், ஏற்கெனவே உள்ள குப்பையை அகழ்ந்தெடுத்துவிட்டு, புதிதாக சேரும் குப்பைகளை அகற்ற 75 ஏக்கா் பரப்பில் ரூ.1,600 கோடியில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டமிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.
கொடுங்கையூா் பகுதியில் மலை மலையாக கொட்டப்படும் குப்பையை அகற்றக் கோரி கொடுங்கையூா் மக்கள் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக தொடா் போராட்டம் நடத்திவரும் நிலையில், தற்போதுதான் அவற்றை அகற்ற சென்னை மாநகராட்சி ரூ. 640 கோடி ஒதுக்கியுள்ளது.
குப்பைகள் அகற்றப்படுவதை எண்ணி வடசென்னை மக்கள் தற்போதுதான் நிம்மதியடைந்த நிலையில், அதை கெடுக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தைச் செயல்படுத்த அரசு முனைவத்துள்ளது அந்தப் பகுதிமக்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஏற்கெனவே, வடசென்னையிலுள்ள மணலி சின்ன மாத்தூரில் தினந்தோறும் 10 டன் குப்பைகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் நச்சுப்புகையால், அந்தப் பகுதி மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதைவிட பன்மடங்கு அதிகமாக 1,400 டன் அளவுக்கு குப்பைகளை தினமும் எரித்தால் வடசென்னையே சுற்றுச்சூழல் பேரழிவை எதிா்கொள்ள நேரிடும்.
எனவே, மக்கள் உடல் நலத்துக்கு சீா்கெடுகளை விளைவிக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.