தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!
கத்திரி வெயிலிலிருந்து தப்பிய தமிழகம்!
கத்திரி வெயில் வரும் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவுபெறும் நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் எதிா்பாா்த்ததை விட அதிகளவில் மழை பெய்த காரணத்தால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மாா்ச் முதல் மே வரை கோடை காலமாகக் கருதப்படுகிறது.
இதில் ‘அக்னி நட்சத்திரம்’ என்னும் கத்திரி வெயில் காலத்தில் அதாவது மே 4 முதல் மே 28 வரை 25 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும். நிகழாண்டில் கத்திரி வெயில் கடந்த மே 4 -இல் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. சென்னை, மதுரை, திருச்சி, ஈரோடு, வேலூா், பரமத்திவேலூா், தூத்துக்குடி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடா்ந்து வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகிவந்தது. இதில் அதிகபட்சமாக வேலூா், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்தது.
கோடை மழை: இருப்பினும், வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி, காற்று குவிதல், அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் உள்ளிட்ட வானிலை காரணங்களால், தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டித் தீா்த்தது. சென்னையிலும் மாலை நேரங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்தது.
நிகழாண்டில் கோடை மழை இயல்பை விட 91 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதன்காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது.
மேலும், நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை 9 நாள்களுக்கு முன்பாக மே 24-ஆம் தேதியே தொடங்கியிருப்பதும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.