குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை
தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில், நள்ளிரவில், சாலையில் எதிரெதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் பலியானார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நள்ளிரவில், காலியாக இருந்த சாலையில் இப்படியொரு விபத்து நடந்திருப்பது விடியோ காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் பின்னந்தலையில் அடிபட்டு பலியானார். மதுபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டை நரசிம்மன் சாலை பகுதியில் நேற்று இரவு 12 மணியளவில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பைக் மெக்கானிக்கான தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அழகேசன் (24) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
சரவணன் (36) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், அழகேசன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டதில் ஹெல்மெட் அணியாமல் இருந்த அழகேசன் என்பவருக்கு பின்னந்தலையில் பலமாக அடிபட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், மது போதையில் சரவணன் இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதும் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சரவணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.