வக்ஃப் சட்டம் 1995-க்கு எதிரான மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வக்ஃப் சட்டம் 1995-இன் சில பிரிவுகளுக்கு எதிரான மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிகில் உபாத்யாய என்பவா் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது: முறையற்ற வகையில் வக்ஃப் சொத்துகளுக்கு சாதகமாக அமைகிற சிறப்புப் பிரிவுகளை இயற்றவோ, முஸ்லிம் அல்லாதவா் சொத்துகளை இழக்கச் செய்யும் வக்ஃப் மற்றும் வக்ஃப் சொத்துகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாஸி ஆகியோா் அடங்கிய அமா்வில் மனுதாரரின் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய செவ்வாய்க்கிழமை முறையிட்டாா்.
அப்போது 1995-ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிரான மனுவை 2025-ஆம் ஆண்டில் ஏன் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்றும், கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது என்றும் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த அஸ்வினி உபாத்யாய, ‘1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃப் சட்டத்தில் 2013-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். மேலும் தேசிய சிறுபான்மையினா் நல ஆணையம் 1992, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-இன் சில பிரிவுகளுக்கு எதிராக 2020-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதாகவும் அவா் சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் இணைத்தது. மேலும் அந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.